போலி இ-சலான், பிரதம யோஜனா செயலி அனுப்பி நூதன முறையில் 8 பேரிடம் ரூ.9.56 லட்சம் மோசடி
புதுச்சேரி, நவ. 22: போலி இ-சலான், பிரதம யோஜனா செயலி அனுப்பி, புதுச்சேரியில் பெண்கள் உட்பட 8 பேரிடம் ரூ.9.56 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவரை, மர்ம நபர்கள் அவரது பங்குசந்தை குரூப்பில் இணைந்து, எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி, மேற்கூறிய நபரும் மர்ம நபர்கள் அனுப்பிய லிங்கில் பல்வேறு தவணைகளில் ரூ.5.95 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதில், அவர் சம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, முத்தியால்பேட்டை சேர்ந்த ஆண் நபர் முகநூலில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் ரூ.85 ஆயிரத்துக்கு டி.வி. ஆர்டர் செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.ரெட்டியார்பாளையம் சேர்ந்த ஆண் நபர் போலியான செயலியை பதிவிறக்கம் செய்து சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.24 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது.மேலும், முதலியார்பேட்டை சேர்ந்த ஆண் நபர் போலி இ-சலான் செயலி பதிவிறக்கம் செய்து ரூ.73 ஆயிரமும், நெல்லித்தோப்பு சேர்ந்த நபர் ரூ.62 ஆயிரமும், சண்முகாபுரத்தை சேர்ந்த ஆண் நபர் ரூ.55 ஆயிரமும், துப்ராயப்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.37 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த பெண் ரூ.25 ஆயிரம் என மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மேற்கூறிய 8 பேர் மொத்தமாக ரூ.9.56 லட்சத்தை மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.