புதுச்சேரி வில்லியனூரில் பரபரப்பு வழிப்பறி செய்ய ரெஸ்டோபாரில் சதி திட்டம்: 6 பேர் கும்பல் கைது
புதுச்சேரி, செப். 22: புதுச்சேரி வில்லியனூர் ரெஸ்டோபாரில் தங்கி வழிப்பறி செய்ய சதி திட்டமிட்ட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள், செல்போன்களை கைப்பற்றினர்.புதுச்சேரி பத்துக்கண்ணு வில்லியனூர் மெயின் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் செயல்படும் ரெஸ்டோ பாரில் ஒரு கும்பல் கத்திகளுடன் வழிப்பறி செய்யும் நோக்கி தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 106வது அறையில் சோதனையிட்டபோது, போலீசாரை கண்டதும் 6 பேர் கொண்ட கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து, சோதனையிட்டனர். அதில் அவர்கள் கத்திகளை மறைத்து வைத்திருந்ததும், வழிப்பறி செய்யும் நோக்கில் திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து 6 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள், புதுசாரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (23), வாணரப்பேட்டை சஞ்சீவி (21), விழுப்புரம் பள்ளிநெலியனூர் ராகதேவன் (21), திருபுவனை ரியாஸ் அஹமத் (25), உழவர்கரை அன்பரசன் (21), சாரம் வேலன் நகர் சத்தியமூர்த்தி (22) என்பதும், இவர்கள் மீது கொலை,
கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதும், பத்துக்கண்ணுவில் வில்லியனூர் பிரதான சாலையில் செல்வோர், வணிகர்களிடம் வழிப்பறி செய்வதற்காக சதிதிட்டம் தீட்டி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள், செல்போன்களை கைப்பற்றினர். பின்னர் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.