விழுப்புரத்தில் பரபரப்பு ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதில் காங். நிர்வாகிகள் மோதல்
விழுப்புரம், ஆக. 21: விழுப்புரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சேகர் மற்றும் அதே அணியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது அவர்களுக்குள் முதலில் யார் மாலை அணிவிப்பது என்பதில் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து சிலையின் அருகிலேயே ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். உடனடியாக அங்கு இருந்த கட்சித் தொண்டர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.