ஆரோவில்லுக்கு தென்னிந்திய ராணுவ தளபதி வருகை
வானூர் ஆக. 20: வானூர் தாலுகா ஆரோவில்லுக்கு தென்னிந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் திங்ராஜ் சேத் வருகை தந்தார். மனித ஒற்றுமையின் மையமாக விளங்கும் ஆரோவில் சர்வதேச நகரத்தை அவர் பார்வையிட்டார். இளைஞர் மேம்பாட்டுக்கான உயர்மட்ட விவாதங்களைஆரோவில் பவுண்டேஷனின் செயலாளர் ஜெயந்தி ரவியுடன் லெப்டினென்ட் ஜெனரல் கலந்துரையாடினார். இந்திய பாதுகாப்புத் துறைக்கும், ஆரோவில்லின் கல்வி முயற்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், இந்திய ராணுவத்துடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் ஆரோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமையும் என்றும் குறிப்பாக, இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர உதவும் வகையிலான உடற்பயிற்சி திட்டங்கள், தேசிய மாணவர் படை திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் ஆரோவில்லின் கல்வியுடன் இணைந்து செயல்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்கள். பின்பு லெப்டினென்ட் ஜெனரல் சேத், ஆரோவில்லின் முக்கியமான அடையாளமான மாத்ரிமந்திர் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்.