திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தை சேதம் செய்த 5 வடமாநில வாலிபர்கள் கைது
விழுப்புரம், நவ. 19: சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 10ம் தேதி மாலை, சென்னையிலிருந்து புறப்பட்டு வந்தது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை கடந்து வந்தபோது, திடீரென ரயில் இன்ஜினில் சத்தம் எழுந்ததால், விக்கிரவாண்டி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது, இன்ஜின் சக்கரத்தில் உடைப்பு இருந்ததால், உடனடியாக விழுப்புரத்திலிருந்து மாற்று இன்ஜின் வரவழைத்து, இணைத்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த ரயில் ஒலக்கூர் பகுதியில் வந்தபோது சில மர்மநபர்கள், இரும்பு துண்டை தண்டவாளத்தில் வைத்ததால் தண்டவாளம் சேதமடைந்திருந்ததை கண்டறிந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் குழுவினர் விசாரணை நடத்தியபோது, திண்டிவனம் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும், வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் சிலர், போதையில், தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து, விளையாடியதும், அந்த இரும்பு துண்டு, ரயில் சக்கரத்தையும், தண்டவாளத்தையும் சேதப்படுத்தியதும் தெரியவந்தது.இதனையடுத்து ரயில் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதாக, பீகாரை சேர்ந்த ஜமுனாராம் மகன் அபிஷேக்குமார்(25), சோட்டேலால் மகன் ஆகாஷ்குமார்(21), விஜய்ராம் மகன் பாபுலால்(20), ராஜிராம் மகன் தீபக்குமார்(23), துபானிராம் மகன் ராஜாராம்(20) ஆகியோர் மீது, திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து நேற்று விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.