திருபுவனையில் பரபரப்பு ரெஸ்டோ பார் திறப்புக்கு எதிர்ப்பு தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்
திருபுவனை, நவ. 19: புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை மையப்பகுதியாக உள்ளது. இங்குள்ள சர்வீஸ் சாலையில் 2 மதுபான கடைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேம்பாலம் அருகில் புதிதாக ரெஸ்டோ பார் ஒன்று திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விசிக, தவெக உள்ளிட்ட கட்சியினர் ஒன்றுசேர்ந்து, அப்பகுதியில் புதிதாக ரெஸ்டோ பார் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்குவழி சாலையில் இந்திராநகர் துணை மின்நிலையம் அருகே கொட்டும் மழையிலும் பொதுமக்கள் குடைகளை பிடித்தவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருபுவனை பகுதிகளில் ரெஸ்டோ பார்கள், மதுபான கடைகள் அமைத்தால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும், சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும் எனக்கூறி அவர்கள் கோஷமிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருபுவனை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி நான்குவழி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.