கடலூர் சோனாங்குப்பத்தில் ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினர் வாக்குவாதம்
கடலூர், ஆக. 19: கடலூர் அருகே மீனவ கிராமமான சோனாங்குப்பத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊர் மக்கள் ஒன்று கூடி ஊர் தலைவரை தேர்ந்தெடுத்து ஊர் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஏற்கனவே உள்ள ஊர் தலைவர் பதவி முடிவடைந்தநிலையில் ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதனால் காவல்துறை முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி ஊர் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று சோனாங்குப்பத்தில் உள்ள பெருமாள் கோயிலில் 300க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடினர். அப்போது ஏற்கனவே உள்ள நிர்வாகத்தினரே தொடர வேண்டும் என ஒரு தரப்பினரும், நடைமுறையில் உள்ளபடி ஒவ்வொரு ஆண்டும் புது தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கூறினர். இதனால் பிரச்னை ஏற்பட்டு காவல்துறை முன்னிலையில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் ஒன்று கூடிய அனைத்து கிராம மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.