ரெட்டிச்சாவடி அருகே அடுத்தடுத்து 2 அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
ரெட்டிச்சாவடி, நவ. 18: கடலூர் அடுத்த பள்ளிப்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றி கொண்டு கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் கல் வீசினார். இதில் பின்பக்கம் கண்ணாடி உடைந்து சேதமானது. மேலும் பேருந்தில் பயணம் செய்த சீர்காழி பகுதியைச் சேர்ந்த மனோஜ் (28) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மனோஜ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அதே பகுதியில் மற்றொரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் கல் வீசியதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடலூர் ரெட்டிச்சாவடி அருகே அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகளில் மர்ம நபர்கள் கற்கள் வீசியதில்ல் பின்பக்கம் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.