ஆற்றங்கரையில் இறங்கிய தொழிலாளி மாயம் போலீசில் புகார்
பண்ருட்டி, அக். 17: பண்ருட்டியை அடுத்துள்ள தாழம்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை(45). கூலி தொழிலாளி. இவரது மனைவி தைரியலட்சுமி (35). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது .இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பள்ளியில் படித்து வருகின்றனர். இவரும், இவரது நண்பர் பத்மநாபன் என்பவரும் பண்ருட்டியில் பலாப்பழம் விற்றுவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் புதுச்சேரி மடுகரைக்கு சென்று மது அருந்திவிட்டு திரும்பி மதுபாட்டில் வாங்கி வரும்போது மேல்பட்டாம்பாக்கம் போலீஸ் செக்போஸ்ட்டை கடப்பதற்காக, அண்ணாதுரை ஆற்றங்கரையில் இறங்கியுள்ளார். பிறகு இவரை காணாததால், இவரது நண்பர் பத்மநாபன் வீட்டுக்கு வந்து தகவல் தெரிவித்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.