வீடு புகுந்து நகை, பைக் திருடிய வாலிபர் கைது
திண்டிவனம், அக். 16: திண்டிவனம் அடுத்த ஆண்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜெயந்தி (42). இவர் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அவர் வீட்டின் சாவியை வீட்டின் அருகே மறைத்து வைத்ததை மர்ம நபர் நோட்டமிட்டுள்ளார். ஜெயந்தி சென்றவுடன் சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவை திறந்து 2 சவரன் தங்க நகை, 500 கிராம் வெள்ளி கொலுசுகள் மற்றும் வாசலில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயந்தி ஒலக்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வந்தனர். அப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சிங்கனூர் கிராமம் புதுகாலனி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் அசோக்(43) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி கொலுசு, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.