உளுந்தூர்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு கணக்கில் வராத பணம் ரூ.40 ஆயிரம் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை, அக். 16: உளுந்தூர்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதில் கணக்கில் வராமல் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த போலீசார் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். முன்னதாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடைபெறுவதற்கு முன் சார் பதிவாளர் தாமோதரன் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேறியதால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.