சித்தானந்தா கோயில் அருகே பரபரப்பு தனியார் மழலையர் பள்ளியில் தீ விபத்து
புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே தனியார் மழலையர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் புதுச்சேரியை சேர்ந்த 10 ஆசிரியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் மழலையர் பள்ளி வழக்கம்போல் நேற்று காலை திறக்கப்பட்டு ஆசிரியர்கள், குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது, காலை 9 மணியளவில் பள்ளியின் மெயின் சுவிட்சு பாக்ஸ் ஊழியர் ஒருவர் ஆன் செய்தபோது, திடீரென கரும்புகை வந்தது. அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக பள்ளி வளாகத்தில் இருந்த குழந்தைகளை வெளியே அழைத்து வந்தனர். சிறிது நேரத்தில் சுவிட்சு பாக்ஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் பாரதி என்பவருக்கு புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் கிளினிக் அழைத்து சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அப்பகுதியில் உள்ள குரங்குகள் மெயின் சுவிட்சு பாக்ஸ் உள்ளே மின்சார வயரை சேதப்படுத்தியதால் தீ விபத்து நடந்ததாக தெரியவந்தது. பின்னர், குழந்தைகளை பள்ளியில் விட வந்த பெற்றோர்கள், மீண்டும் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து கொண்டு திரும்பி விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.