கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் 7.5 பவுன் தாலி செயின் பறிப்பு
கள்ளக்குறிச்சி, செப். 15: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள சோமண்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் முகிலன் மனைவி கல்கி (27). இவர் கள்ளக்குறிச்சி-கச்சேரி சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அப்போது சோமண்டார்குடி கிராம எல்லை பகுதியில் வந்த போது பின்னால் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் கல்கியின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் சென்றதால் திடீரென அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் 3 பேரும் கல்கி கழுத்தில் இருந்த 1.5 பவுன் தங்க நகையை பறித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கல்கி கழுத்தில் மேலும் தங்க நகையை கழற்றி கொடுக்க சொல்லி மிரட்டியுள்ளனர்.
இதனால் கல்கி உயிருக்கு பயந்து தனது கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி செயினை கழற்றி கொடுத்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் கல்கி, திருடன் திருடன் என கத்தி கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு திரண்டும் அவர்களை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கல்கி, கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் பறித்து சென்ற நகையின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் ஆகும்.