செக் மோசடி: டாக்டருக்கு ஓராண்டு சிறை பண்ருட்டி நீதிமன்றம் தீர்ப்பு
பண்ருட்டி, நவ. 13: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் வக்கீல் பார்த்தசாரதி. கடலூர் செம்மண்டலம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் அரசு சித்த மருத்துவர் செந்தில்குமார்(53). இவர் குடும்ப செலவிற்காக பார்த்தசாரதியிடம் கடந்த 2021ல், ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக, பின் தேதியிட்டு செக் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட தேதியில், செக்கை வங்கியில் பார்த்தசாரதி டிபாசிட் செய்துள்ளார். ஆனால், பணம் இல்லை என, செக் திரும்பி வந்தது. இதையடுத்து, பண்ருட்டி நீதிமன்றத்தில், பார்த்தசாரதி செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மார்சல் ஏசுவதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சித்த மருத்துவர் செந்தில்குமார், ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் பார்த்தசாரதிக்கு இழப்பீடாக தர வேண்டும் எனவும் செக் மோசடி செய்ததற்காக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.