போலீஸ் என கூறி காதலர்களிடம் செயின் பறித்தவர் அதிரடி கைது
ரெட்டிச்சாவடி, அக். 13: கடலூர் பச்சையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி(20). இவர் தனது காதலியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடுவதற்காக, கடந்த மாதம் 19ம் தேதி அவருடன் காரில் பெரிய கங்கணாங்குப்பம் தனியார் கார் ஷோரூம் அருகே சாலை ஓரத்தில் நண்பர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த மர்ம நபர் ஒருவர் பாலாஜியிடம் நான் போலீஸ், உன்னை இன்ஸ்பெக்டர் அழைத்து வர சொன்னார்.
விசாரணைக்கு செல்வதால், அணிந்திருந்த செயின் மற்றும் மோதிரத்தை கழற்றி காரில் வைத்திருக்கும்படி தெரிவித்தார். இதை தொடர்ந்து பாலாஜி, தனது நகைகளை கழட்டி காதலியிடம் கொடுத்துவிட்டு அந்த நபருடன் பைக்கில் சென்றார். அந்த நபர் பாலாஜியை சிறிது தூரம் அழைத்து சென்று, இங்கேயே காத்திரு, இன்ஸ்பெக்டர் வந்து விசாரிப்பார் என கூறிவிட்டு மீண்டும் கார் இருந்த இடத்துக்கு வந்து, பாலாஜியின் காதலியிடம் காரை முழுமையாக இன்ஸ்பெக்டர் சோதனை செய்ய உள்ளார்.
உன்னுடைய நகை மற்றும் பாலாஜி நகையை என்னிடம் கொடுத்து வைத்தால் பத்திரமாக வைத்திருப்பேன் என கூறி அவரிடமிருந்து பாலாஜியின் 1 பவுன் நகை, 2 கிராம் மோதிரம் மற்றும் அந்த பெண் அணிந்திருந்த 1 பவுன் நகையை வாங்கிக் கொண்டு பைக்கில் தப்பி சென்றார். இதுகுறித்து பாலாஜி, ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ரெட்டிச்சாவடி காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார், புதுக்கடை பைபாஸ் சாலை மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில், விருத்தாசலம் சின்னக்காப்பான்குளம் மேற்கு தெருவை சேர்ந்த சிவராமன்(45) என்பதும், பெரிய கங்கணாங்குப்பத்தில் காதலர்களிடம் போலீஸ் என கூறி நகை பறித்ததும் தெரியவந்தது.
பின்னர் சிவராமனிடம், நகை பறித்த இடத்தை அடையாளம் காட்ட போலீசார் அழைத்துச் சென்றனர்.
பெரிய கங்கணாங்குப்பம் தனியார் கார் ஷோரூம் எதிரே உள்ள காலி பிளாட்டிற்கு அழைத்துச் சென்றபோது, சப்-இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு சிவராமன் தப்பி ஓட முயன்றார். அப்போது அருகில் இருந்த பள்ளத்தில் கீழே விழுந்ததில், அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சிவராமன் மீது புதுச்சேரி, கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.