மின்சாரம் தாக்கி பெண் பலி
காட்டுமன்னார்கோவில், ஆக. 12: காட்டுமன்னார்கோவில் அடுத்த பரிவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவரது மனைவி சுந்தரி (35). அதே பகுதியை சேர்ந்த காமராஜர் தெருவில் வசித்து வருகின்றனர். நேற்று கணவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுந்தரி பிளக் பாய்ண்டில் ஒயரை சொருகி லைட் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். வேலைக்கு சென்ற கணவர் சுந்தரியிடம் பேச போன் செய்தபோது போனை எடுக்கவில்லை.இதனால் அருகில் உள்ள உறவினருக்கு போன் செய்து சுந்தரியிடம் பேச கொடுக்க சொல்லி உள்ளார். அப்போது உறவினர் சென்று பார்த்தபோது சுந்தரி மயங்கி கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு அருகே உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.