விழுப்புரம் அருகே பரபரப்பு இளைஞர் தற்கொலைக்கு நீதி கேட்டு பெற்றோர், கிராம மக்கள் போராட்டம் காவல்நிலையம் முற்றுகை: சாலை மறியல்
விழுப்புரம், செப். 11: விழுப்புரம் அருகே வாலிபர் தற்கொலைக்கு நீதி கேட்டு பெற்றோர், கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சென்னை-திருச்சி சாலையில் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் அருகே பிடாகம் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய்(21). கூலி ெதாழிலாளி. இவர் கடந்த 7ம்தேதி விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த பொருட்காட்சிக்கு நண்பர்களுடன் சென்றார். அப்போது வழுதரெட்டியை சேர்ந்த விஜய் என்பவர் காலி வாட்டர் பாட்டிலை சஞ்சய் மீது தூக்கி வீசியுள்ளார். இதனை தட்டிகேட்டபோது விஜய் மற்றும் அவரது நண்பர்கள் அவினாஷ், ஹரி, பாண்டியன், மாதவன் மற்றும் சிலர் சேர்ந்து அங்கிருந்த சேரை எடுத்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த சஞ்சய் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்த ெபற்றோர், உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சஞ்சய் இறப்புக்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணம் என்று கூறி நேற்று பெற்றோர், உறவினர்கள் தாலுகா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ேமலும் உடலை வாங்க மறுத்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் சொந்த ஊரான பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், சம்பவத்தன்று பொருட்காட்சிக்கு சென்ற சஞ்சயை வழுதரெட்டியை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். அதன்பிறகும் அவருடைய நண்பர்களிடம் சொல்லி சஞ்சயை கேலி செய்துள்ளனர். இதுகுறித்து உடனே தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் சஞ்சய் தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார். அவரது இறப்புக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். 2 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். சிலர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உயிரிழந்த சஞ்சய் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கூடுதல் எஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சஞ்சயை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அதில் விஜய், பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். எனவே போராட்டத்தை கைவிட்டு, உடலை பெற்றுக்கொள்ளுமாறு கூறினர். அப்போது பொதுமக்கள் நிபந்தனைகளை போலீசார் நிறைவேற்றுவதாக உறுதியளித்த பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல் காரணமாக சென்னை - திருச்சி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.