குறைந்த விலையில் கார் விற்பனை ெசய்வதாக பண மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது
கடலூர், அக். 10: கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 4ம் தேதி முகநூலில், குறைந்த விலைக்கு கார் விற்பனைக்கு உள்ளதாக இருந்த விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரமேஷ் என்ற நபரிடம் பேசி உள்ளார். அப்போது ரூ.3 லட்சத்திற்கு எக்ஸ்யூவி கார் விலைக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனை நம்பி முன்பணமாக 6 தவணைகளாக ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் பணத்தை ரமேஷிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ரமேஷ், காரை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
இது குறித்து கடலூர் கடலூர் இணைய வழி குற்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முகநூலில் விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டவர் நாகப்பட்டினம் கோட்டைமேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் ரமேஷ் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு கியூபன் பார்க் அருகே பதுங்கியிருந்த ரமேஷை கடலூர் இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கடலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும், என்றார்.