தனியார் நிறுவனத்தில் லாரி மோதி பெண் பலி
திருபுவனை, டிச. 7: திருபுவனை பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கெங்கராம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரவணன்(40) லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி (35). அதே நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் நிறுவனத்தின் குப்பைகளை சேகரித்துக்கொண்டு இன்னொரு தூய்மை பெண் பணியாளருடன் குடோன் அருகில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லாரி கம்பெனி உள்ளே பொருள்களை இறக்கிவிட்டு சாய்வான தளத்தில் இருந்து இறங்கியது. இதில் லாரி நின்று கொண்டிருக்கிறது என்று நினைத்து 2 பெண் பணியாளர்கள் கடக்க முயன்றபோது திடீரென லாரி முன்பக்கமாக வந்து இந்துமதி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை தொழிற்சாலை நிர்வாகம் ஆம்புலன்ஸ் மூலம் அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இந்துமதியை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து இந்துமதி கணவர் சரவணன் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் விசாரணை நடத்தினார்.