சின்னசேலம் அருகே விடிய விடிய தேடுதல் மாயமான சிறுமி சோளக்காட்டில் மயங்கிய நிலையில் மீட்பு
சின்னசேலம், டிச. 7: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நைனார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் மகள் கிருத்திஷா (3). இந்த குழந்தை நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தது. பின் சிறிது நேரம் கழித்து அவரது தந்தை வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதையடுத்து குழந்தையை அவரது உறவினர்கள் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது கிணற்றின் அருகே செல்வது தெரிந்தது.
இதையடுத்து கிணற்றில் விழுந்திருக்கலாமா என்ற கோணத்தில் நைனார்பாளையம் தீயணைப்பு துறை அலுவலர்கள் கிணற்றில் இறங்கி இரவு 12 மணி வரை தேடினர். மேலும் கிணற்றில் கேமராவை விட்டு நீருக்கடியில் குழந்தை உள்ளதா என்றும் பார்த்தனர். அதைப்போல கீழ்குப்பம் காவல் துறையினரும் அந்த வீட்டை சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் தேடினர். இரவு நேரம் என்பதால் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீண்டும் நேற்று காலை தார்சாலை வழியாக தேடிச்சென்றனர். அப்போது ஒரு சோள வயலின் கரையில் குழந்தை படுத்திருந்ததை கண்டனர். அங்கு சென்று பார்த்தபோது குழந்தை பனியில் நடுங்கிய நிலையில் மயக்கமடைந்து காணப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து பின் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.