நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு இளநிலை ஆய்வாளர் பணியிடை நீக்கம்
விருத்தாசலம், நவ. 7: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் விருத்தாசலம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விருத்தாசலத்தில் அமைந்துள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு லாரிகளில் ஏற்றி கொண்டுவரப்பட்டு மூட்டைகளை இறக்காமல் லாரிகளிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பெய்த கனமழையின் காரணமாக லாரிகளிலிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சேமிப்புக் கிடங்கிற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அலுவலர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று நுகர்பொருள் வாணிப கழகத்தின் தரக்கட்டுப்பாடு இளநிலை ஆய்வாளர் கருணாநிதியை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.