ஆன்லைன் செயலியில் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
கடலூர், ஆக. 6: கடலூர் மாவட்டம் கீழ் ஒரத்தூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்(21). இவர் ஆன்லைன் செயலியில் பழைய இருசக்கர வாகனம் விற்பனைக்கு இருப்பதாக இருந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூ.12500 கொடுத்தால் இருசக்கர வாகனத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய வசந்தகுமார், அந்த நபருக்கு ஆன்லைன் மூலம் ரூ.12,500 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்று கொண்டதும் அந்த நபர், இருசக்கர வாகனத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதேபோல முஷ்ணம், குணமங்கலம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (27) என்பவர் ரூ.15,800, குறிஞ்சிப்பாடி வடக்குத்து பகுதியை சேர்ந்த சக்திவேல் (24) என்பவர் ரூ.15 ஆயிரத்தை இந்த நபருக்கு அனுப்பி ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும், கடலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆன்லைன் செயலி மூலம் மோசடியில் ஈடுபட்டது கடலூரை சேர்ந்த வெற்றிவேல் (35) என்பது தெரிந்தது. இதையடுத்த அவரை கடந்த மே மாதம் 4ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் வெற்றிவேலுக்கு உடந்தையாக இருந்த சென்னை அகத்தியர் நகரை சேர்ந்த மைக்கேல்ராஜ் (39) என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.