செஞ்சி அருகே பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை கொள்ளை
செஞ்சி, ஆக. 6: சென்னை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் தர்மலிங்கம் (29). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினரை பார்க்க சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஏழரை பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் காணவில்லை. யாரோ மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தர்மலிங்கம் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும்.