கல்வராயன்மலை எட்டியார் ஆற்றில் வெள்ள பெருக்கு
கல்வராயன்மலை, டிச. 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வெள்ளிமலை ஒன்றியம் வஞ்சிக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பாக்கனம் கிராமத்தில் சுமார் 150க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கும், வாழக்குழி கிராமத்திற்கும் இடையே எட்டியார் ஆறு ஓடுகிறது. அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் ஏதாவது வாங்க வர வேண்டும் என்றால் இந்த ஆற்றை கடந்து வாழக்குழி வந்து அங்கிருந்து வஞ்சிக்குழி கிராமத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலமாக சங்கராபுரம், கள்ளக்குறிச்சி பகுதிக்கு வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்வார்கள். இந்நிலையில் தற்போது கல்வராயன் மலையில் பெய்த கனமழை காரணமாக பாக்கனம்- வாழக்குழி இடையே உள்ள செட்டியார் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆபத்தை உணராமல் காற்றாற்று வெள்ளத்திலும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆகையால் எட்டியார் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.