விருத்தாசலத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது
விருத்தாசலம், அக். 4: பெண்ணாடம் அருகே உள்ள நந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் முத்துமணி(25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 30ம் தேதி சென்னையிலிருந்து விருத்தாசலம் வரை ரயிலில் பயணம் செய்துள்ளார். விருத்தாசலம் ரயில் நிலையம் வந்ததும் இரவு நேரம் என்பதால் ரயில்வே நிலையத்திலேயே படுத்து உறங்கி விட்டு, நந்தப்பாடிக்கு பேருந்தில் செல்வதற்காக அதிகாலை 4 மணி அளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஜங்ஷன் ரோடு பாத்திமா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி, அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு சென்றனர்.. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், விருத்தாசலம் அண்ணா நகரை சேர்ந்த மணிவண்ணன் மகன் அபிஷேக் (20) மற்றும் ஸ்பீடு என்கிற பாக்கியராஜ் ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து அபிஷேக்கை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள பாக்யராஜை தேடி வருகின்றனர்.