அன்புமணி தரப்பிடமிருந்து பாமகவை மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க 5 பேர் கொண்ட குழு ராமதாஸ் அதிரடி நியமனம்
திண்டிவனம், டிச. 3: அன்புமணி தரப்பிடமிருந்து பாமகவை மீட்டெடுக்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க 5 பேர் கொண்ட குழுவை ராமதாஸ் நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவிய தொடர் மோதல் காரணமாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்தார். ஆனால் 2026 ஆகஸ்ட் 1ம் தேதி வரை பாமக தலைவராக தொடர்ந்து அன்புமணியே செயல்படுவார் என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதிசெய்தது. பாடுபட்டு உழைத்த கட்சியை அன்புமணி திருடி விட்டதாக கொந்தளித்த ராமதாஸ், மகனுக்கு சாபமிட்டார். மேலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஜி.கே.மணி தலைமையில் அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என அறிவித்த ராமதாஸ், பாமகவை தன்வசம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட புதிய குழுவை அமைத்துள்ளார். அக்குழுவில் கௌரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் மன்சூர் உசேன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதாசிவம், முன்னாள் நீதிபதி அருள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பாமகவை மீட்டெடுப்பதற்கான தொடர் சட்ட போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கும் முயற்சியில் ராமதாஸ் இறங்கி உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறினர்.