காரைக்காலில் துணிகரம் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை
காரைக்கால், டிச. 3: காரைக்கால் நகர பகுதி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள எம்ஜி.நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன். தனியார் பள்ளி ஆசிரியர். தனது 3 மாத குழந்தையை பார்க்க கடந்த வெள்ளியன்று வீட்டை பூட்டிவிட்டு, மனைவி வீட்டுக்கு கும்பகோணம் சென்றார். தொடர்ந்து, விடுமுறை முடிந்து நேற்று காலை பணிக்கு திரும்பி வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. மேலும், இதே கும்பல் அந்த வீட்டின் பின்புறம் உள்ள மற்றொரு வீட்டிலும் திருட முயற்சி நடந்துள்ளது. இது குறித்து ஆசிரியர் நாகராஜன், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தெற்கு எஸ்பி சுபம் கோஷ் மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள், தனிப்படை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகரப் பகுதியில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.