2வது வாரமாக வியாழன் பிரஸ்மீட் ரத்து அன்புமணியை நீக்குவது தொடர்பாக 31ம் தேதி ராமதாஸ் முக்கிய முடிவு பாமக வட்டாரத்தில் பரபரப்பு
திண்டிவனம், ஆக. 29: பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமான தைலாபுரம் வியாழன் செய்தியாளர் சந்திப்பை 2வது வாரமாக தொடர்ந்து ரத்து செய்துள்ள நிலையில், அன்புமணியை செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக வருகிற 31ம்தேதி முக்கிய முடிவு அறிவிக்கலாம் என்ற பரபரப்பு அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே 7 மாதங்களை கடந்த நிலையிலும் அதிகார மோதல் நீடித்து வருகிறது. இருவரும் பாமக போட்டி பொதுக்குழுவை நடத்தி முடித்த நிலையில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு 13 தீர்மானங்களை முன்மொழிந்தன. அதன்பிறகு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியது. இதற்கான காலக்கெடு நாளை (30ம்தேதி) முடிவடையும் நிலையில், இதுவரை அன்புமணி தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதனிடையே ராமதாசின் மூத்த மகள் காந்திக்கு பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்ட நிலையில், செயல் தலைவராக விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் தகவல் பரவுகிறது. தனது தந்தையின் பக்கம் நான் எப்போதும் நிற்பேன் என காந்தி கூறி விட்டதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அன்புமணிக்கான காலக்கெடு முடியும்வரை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 19ம்தேதிக்கு பிறகு வந்த வழக்கமான தைலாபுரத்தில் நடக்கும் வியாழன் செய்தியாளர்கள் சந்திப்பை ராமதாஸ் தவிர்த்தார். இதனிடையே நேற்றும் (28ம்தேதி) செய்தியாளர்கள் சந்திப்பை ராமதாஸ் ரத்து செய்துள்ளார். அன்புமணி குறித்த கேள்விகளை தவிர்க்கவே ராமதாஸ் இம்முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே வருகிற 31ம்தேதி முதல்கட்டமாக பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்குவது தொடர்பான முக்கிய முடிவுகளை ராமதாஸ் அறிவிக்கலாம் என்ற பரபரப்பும் அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆனால் இந்நடவடிக்கை எடுக்காதபடி குடும்பத்திலும், கட்சியிலும் ராமதாசுக்கு நெருக்கமானவர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதுஒருபுறமிருக்க ராமதாஸ் தொடர்பான சில தனிப்பட்ட விமர்சனங்களை சமூக வலைதளத்தில் சிலர் தற்போது பரப்பி வருவதால் தைலாபுரம் வட்டாரங்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளன. இதற்கும் விரைவில் பதிலடி கொடுக்க ராமதாஸ் தரப்பு தயாராகி வருவதால் பாமகவின் அடுத்தகட்ட நகர்வுகளை அக்கட்சியினர் மட்டுமின்றி தமிழக அரசியல் களமும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உள்ளனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.