பாஜக திட்டமிட்டு திமுக தலைவர்களை பழிவாங்குகிறது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
புதுச்சேரி, ஆக. 18: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரை நிகழ்த்தும்போது, வீர சவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்று அவருடைய பெயரை நினைவுகூர்ந்து பேசினார். வீர சவர்க்கர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆங்கில ஏகாதிபத்தியம் அவரை அந்தமான் நிக்கோபார் சிறையில் அடைத்தது. அப்போது, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று குறிப்பிட்டு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார்.
எனவே, மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நன்றி விசுவாசமாக இருப்பதற்காக வீர சவர்க்கரை பற்றி தன்னுடைய உரையில் பேசியிருக்கிறார். மோடியின் இந்த பேச்சு சுதந்திர போராட்டத்தில் தியாகம் செய்தவர்கள், உயிர் நீத்தவர்களை எல்லாம் அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாட்டில் தொடர்ந்து புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க பிரிவுத்துறை திமுக தலைவர்களையும் அமைச்சர்களையும் குறிவைத்து அவர்களுடைய வீடுகளில், அலுவலங்களில் சோதனை செய்து அவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வேலையை செய்து வருகிறார்கள். இது பாஜக திட்டமிட்டு திமுக தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்க பிரிவு துறை ஒன்றும் செய்வதில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கூட தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் முதல்வர் ரங்கசாமி மீதும் அமைச்சர்களின் மீதும் ஆதாரத்தோடு கொடுத்தாலும் கூட அமலாக்க பிரிவு துறையும் மற்றும் சிபிஐயும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவைகளை எல்லாம் பாஜகவின் உடைய அடிமைகளாக செயல்படுகின்றன.