தொரவியில் பழமையான சிற்பம் கண்டுபிடிப்பு
விக்கிரவாண்டி, ஆக. 18: விக்கிரவாண்டி அருகே தொரவியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தட்சிணாமூர்த்தி சிற்பம் மற்றும் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன் ஆகியோர் விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவியில் ஆய்வில் ஈடுபட்டபோது கேணீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தட்சிணாமூர்த்தி சிற்பமும், பொறையாத்தம்மன் கோயில் அருகே உள்ள விளை நிலங்களில் கருப்பும் சிவப்பும் கலந்த பழமையான மண்பாண்ட ஓடுகள், கருப்பு வண்ணத்தில் சுடு மண்ணால் செய்யப்பட்ட கைப்பிடி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. இவைகள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தொல்லியலாளர் துளசிராமன் உறுதிப்படுத்துகிறார்.