ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய தம்பதி கைது
திருக்கோவிலூர், ஜூன் 28: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் (45), ஊராட்சி மன்ற தலைவர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த அந்தோணி (46) அவரது மனைவி பாக்கியவதி (44) ஆகிய இருவரும் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேலுவிடம் அரசு வீடு வழங்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் உங்கள் குடும்பத்திற்கு 2013-14ம் ஆண்டு அரசு வீடு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அதற்கு பிரான்சிஸ் அந்தோணி எங்களுக்கு வீடு எதுவும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். அதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பிரான்சிஸ் அந்தோணி அவரது மனைவி பாக்கியவதி இருவரும் தாக்கியதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் தலையில் அடிபட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிரான்சிஸ் அந்தோணி மற்றும் அவரது மனைவி பாக்கியவதி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அதேபோல் பாக்கியவதி கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.