கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் பதுக்கிய நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
கம்பம் ஜூலை 22: கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்டம், கூடலூ அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி மட்டப்பாறை பகுதியில் பூதகரடு காப்புக்காட்டுக்கு அருகில் உள்ள பரமேஸ்வரி என்பவரது தோப்பில் உள்ள தென்னமரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில், விசாரணைக்காக பரமேஸ்வரி தோட்டத்திற்கு கம்பம் கிழக்குசரக வெண்ணியார் பிரிவு வனவர்கள் ஜெயகணேஷ், ரகு, பொன்னழகர் ஆகியோர் சென்றனர்.
அப்போது பரமேஸ்வரி தோட்டத்திற்கு அருகில் உள்ள காசிவிஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இரகசிய தகவலின் பேரில்,அங்கு சென்று சந்தேகப்படும்படியாக கிடந்த டயர்களில் பயன்படுத்தும் ரப்பர் டியூப்களை சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது ஒரு ரப்பர் டியூப்பில் ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி, அதனுடன் எஸ் எஸ் ஸ்டீலால் ஆன காலி தோட்டாக்கள் மூன்று மற்றும் இரும்பாலான காலி தோட்டாக்கள் மூன்று என மொத்தம் ஆறு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது. தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்தவர்கள் யார் என்று விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வனவர் ஜெயகணேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.