உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனை கூட்டம்
திருப்பூர், ஜூன் 27: உயர் கல்விவழிகாட்டுதல் குறித்த ஆலோசனை கூட்டம் அனைத்து சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளுடன் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து கண்காணிப்புக்குழு, உயர்கல்விக்குழு போன்ற பல்வேறு குழுக்கள் இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கல்வி சார்ந்த அலுவலர்கள் மற்றும் நிர்வாகத்தின் வழி காட்டும் அலுவலர்கள் உயர்கல்வி வழி காட்டுதலுக்கு முக்கியமான பங்களிப்பை வழங்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த 23,500 மாணவர்களும் உயர் கல்விக்கு செல்ல வேண்டும். இலக்கு பெரியதாக இருந்தாலும் அதை அடைய அனைத்து வழிகாட்டுதலையும் அனைத்து அலுவலர்களும் கொடுக்க வேண்டும். மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லாமல் இருப்பதற்கு நிதி பற்றாக்குறை, குடும்பச்சூழல், உயர் கல்விபடிப்பில் ஆர்வமின்மை, தொழில் செய்தல், பெற்றோர்களின் அனுமதியின்மை மற்றும் அருகாமையில் கல்லூரியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதற்கு காரணங்களாக அமைகின்றன. அதற்கான காரணங்களை ஆராய்ந்து தேவையான வழி காட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி 100 சதவீதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை பெற்று உயர்கல்விகற்க வேண்டும் என்பது முக்கிய நோக்கமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுயநிதி கலை அறிவியல்கல்லுாரி முதல்வர்கள் 2024-25ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை குறித்து ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் காலியிடங்கள் குறித்த விபரங்கள் கேட்டறியப்பட்டு அவற்றை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மண்டல இணை இயக்குநர் (உயர்கல்வித்துறை) கலைச்செல்வி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) பக்தவச்சலம், கல்லுாரி முதல்வர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்பலர் கலந்து கொண்டார்கள்.