பழங்குடியின மக்களுக்கு வீடுகள் குறும்பர்பாடி, தொட்டலிங்கி கிராமங்களில் கலெக்டர் ஆய்வு
ஊட்டி, ஜூலை 8: வீடு இல்லாத பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டி தருவது தொடர்பாக சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பர்பாடி, தொட்டலிங்கி கிராமங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசின் சார்பில் வீடு கட்டி தருதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பர்பாடி, தொட்டலிங்கி ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமங்களில் கிராமங்களில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கிராமங்களில் இருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் இக்கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், கோரிக்கைகள் குறித்தும், வீடு இல்லாத பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது ஊட்டி ஆர்டிஒ., சதீஷ், சோலூர் பேரூராட்சி தலைவர் கவுரி, செயல்அலுவலர் அர்சத், ஊட்டி வட்டாட்சியர் சங்கர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.