ஆகஸ்ட், ெசப்டம்பரில் நடைபெற உள்ளது முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் பிரதிநிதிகளுடனான விளக்க கூட்டத்தில் கலெக்டர் தகவல்
திருச்சி, ஜூலை 23: முதலமைச்சர் கோப்பை வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்க உள்ளது, போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 என்ற பெயாில் மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் 32 விளையாட்டுக்கள் 37 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ளது.
போட்டி முன் பதிவு: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், www.sdat.tn.gov.in/https://sdat.tn.gov.in// https:// cmtrophy.sdat.in/cmtrophy என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் ஆக.16ம் தேதி ஆகும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விதிமுறைகள்: இதில் 12 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் பள்ளியிலிருந்தும் 17 வயது முதல் 25வயது வரை உள்ளவர்கள் கல்லூரியிலிருந்தும் போனாபைடு சான்றுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து, மேசைப்பந்து, கைப்பந்து, கேரம், செஸ், கிரிக்கெட் மற்றும் கோ-கோ (பள்ளி பிரிவு மட்டும்), பால் பேட்மிடன் (கல்லூரி பிரிவு மட்டும்) ஆகிய விளையாட்டுகள் மாவட்ட அளவிலும் மற்றும் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து, வாள்சண்டை, ஜூடோ, குத்துச்சண்டை மற்றும் ரோடு சைக்கிளிங் போட்டிகள் ஆகியவை மண்டல அளவிலும், ஸ்குவாஷ் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நேரடி மாநில அளவிலும் நடைபெறவுள்ளது.
பொதுப்பிரிவு: 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ஆதார் அட்டையில் உள்ள மாவட்டத்தில் மட்டுமே கலந்துகொள்ள இயலும்.சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து, கேரம், கிரிக்கெட், கால்பந்து மற்றும் ஈ-ஸ்போர்ட்ஸ் (நேரடி மாநில அளவில்) ஆகிய விளையாட்டுகளுக்கு பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கு போட்டிகள் நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளி: வயது வரம்பு இல்லை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.மாற்றுத்திறனாளி- 100மீ ஓட்டம், குண்டு எறிதல், இறகுப்பந்து மற்றும் வீல்சேர் மேசைப்பந்து, பார்வைத்திறன் மாற்றுத்தினாளி-100மீ ஓட்டம், குண்டு எறிதல், சிறப்பு கையுந்துபந்து, மனவளர்ச்சி குன்றியோர் - 100மீ ஓட்டம், குண்டு எறிதல், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளி - 100மீ ஓட்டம், குண்டு எறிதல், கபாடி, பெருமூளை பாதிப்பு மாற்றுத்திறனாளி - குண்டு எறிதல் மற்றும் கால்பந்து (நேரடியாக மாநில அளவில் நடத்தப்படவுள்ளது).
அரசு ஊழியர்கள்: தற்போது பணியில் உள்ளவர்கள் மட்டும் பணிபுரியும் மாவட்டத்தின் சார்பாக மட்டுமே கலந்து கொள்ள இயலும். கபாடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்துபந்து, சதுரங்கம் மற்றும் கேரம். மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி தொலைபேசி எண். 0431-2420685, 7401703494 என்ற எண்ணில் தொடர்பு கொ ள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.