விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவிக்கு டார்ச்சர்
கோவை, டிச. 13: திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், கோவையில் உள்ள கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர், கோவை சாய்பாபாகாலனி அழகேசன் ரோட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். மேலும், கல்லூரி மாணவி, அழகேசன் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பகுதிநேர ஊழியராக வேலை செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம், மில்லர்புரத்தை சேர்ந்த பள்ளி நண்பர் ஹரிஹரன் (22) அறிமுகமாகி உள்ளார். அவருடன் மாணவி நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது ஹரிஹரன் அவரை தொந்தரவு செய்ததால் மாணவி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அதன் பின்னரும் ஹரிஹரன், மாணவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். மதுபோதையில் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் பேசும்படி தகராறில் ஈடுபட்டுள்ளார். மாணவி, அதை கண்டு கொள்ளாமல் இருந்து வந்ததால் ஆத்திரம் அடைந்த ஹரிஹரன், மாணவி வேலை பார்க்கும் கடைக்கு சென்று அவரை மிரட்டி, அவரது செல்போனை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி, சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரனை நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.