சாய்பாபா காலனி மேம்பால பணி ஆகஸ்டில் முடியும்
கோவை, நவ.28: கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் ஜிஎன் மில்ஸ், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்துள்ளது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் ரோடு பஸ்நிலையம் அருகே உள்ள சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்க புதிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, சாயிபாபா காலனி அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனிவரை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 71 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேம்பாலம் 16.6 மீட்டர் அகலத்திலும், 975 மீட்டர் நீளத்திலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்துக்காக 30 மீட்டர் இடைவெளியில் 23 தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பகுதி, பகுதியாக மேம்பால பணிகள் நடக்கிறது. பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் ரோட்டில் 10 கி.மீ தூரத்திற்கு 4 மேம்பாலங்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே மேட்டுபாளையம் ரோடு விரிவாக்கப்பட்டது. இந்த நிலையில் பூ மார்க்கெட் முதல் கவுண்டம்பாளையம் வரை மேலும் ரோட்டை அகலமாக்க வேண்டும். இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், சுற்றுலா தலமான ஊட்டிக்கு பிரதான பாதையாக இருப்பதால் விரிவாக்கம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.