தங்கும் விடுதியில் வாலிபர் சடலம் மீட்பு
கோவை, அக். 25: கோவை காந்திபுரம் நேரு வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த 22ம் தேதி வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, உடல் அசைவின்றி அந்த வாலிபர் கிடந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், காட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், அவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சதீஷ் (38) என்பது தெரியவந்தது. கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து சில மாதங்களாக கோவையில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உடைய அவர் விடுதி அறையில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இது குறித்து காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.