வனப்பகுதி தோட்டங்களில் விதி மீறல்கள் கண்டறிய உத்தரவு
கோவை,செப். 14: கோவை மாவட்டத்தில் வனப்பகுதி தோட்டங்களில் விதிமீறல்களை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், சூரிய மின்வேலியில் நேரடியாக மின்சாரத்தை பயன்படுத்துவது பல்வேறு இடங்களில் நடக்கிறது. கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நேரடி மின்சாரம் பயன்படுத்திய நிலையில், மின் வேலியில் சிக்கி யானைகள் இறப்பது அவ்வப்போது நடக்கிறது. வன எல்லை கிராமங்களில் விவசாய தோட்டம், பண்ணை, கல்வி நிறுவனங்கள், ரிசார்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சூரிய மின் வேலியை முறையாக பயன்படுத்தவேண்டும். நேரடியாக மின்சாரத்தை சூரிய மின்வேலியில் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ரிசார்ட்ஸ், பண்ணை, கல்வி நிறுவனங்களில் மின்வாரியத்தினர் ஆய்வு நடத்தி நேரடியாக மின்சாரத்தை பயன்படுத்தினால் அந்த மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அந்த தோட்டங்களில், நிறுவனங்களில் மின் இணைப்பு மறுபடியும் வழங்க கூடாது என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், ‘‘நேரடியாக மின்சாரத்தை சிலர், சூரிய மின்வேலியில் பயன்படுத்துவதாக அவ்வப்போது புகார்கள் வருகிறது.மின் வாரியத்தில் இதுதொடர்பாக புகார் தெரிவித்திருக்கிறோம். யானைகள், சூரிய மின்வேலியை கடந்து விடுகின்றன. காட்டு பன்றிகளும் எளிதாக தோட்டத்திற்குள் புகுந்து விடுகின்றன எனக்கூறி சிலர், நேரடியாக மின்சாரத்தை பயன்படுத்துவதாக தெரிகிறது.இதனால் ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தை அவர்கள் உணரவில்லை. மின்வேலி பயன்பாடு குறித்து வன எல்லை கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.