மேட்டுப்பாளையத்தில் மதுபோதையில் மினி பஸ் இயக்கிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
மேட்டுப்பாளையம், டிச. 12: மேட்டுப்பாளையத்தில் மது போதையில் மினி பேருந்தை இயக்கிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் போதையில் இருப்பது தெரிய வந்தால் டிரைவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளுக்கு 10க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று காலை காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த தனியாருக்கு சொந்தமான மினி பேருந்தின் ஓட்டுநர் மது போதையில் இருப்பதாக மேட்டுப்பாளையம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்தடைந்த பேருந்தை மடக்கிய போலீசார், டிரைவரை பிடித்து மது அருந்தி உள்ளாரா? என பரிசோதனை செய்தனர். அப்போது, அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் மதுபோதையில் இருந்த டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் கூறுகையில், ‘‘மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம். இனிவரும் காலங்களில் இதுபோன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டிரைவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.
அதேபோல் பேருந்தை கண்காணிக்க தவறிய உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.