மசக்காளிபாளையம் ரேஷன் கடையில் அரிசி திருட்டு அதிகாரிகள் விசாரணை
கோவை, செப். 3: கோவை ஹோப்காலேஜ் அடுத்த மசக்காளிபாளையம் விஸ்வநாதன் லேஅவுட்டில், சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டக சாலைக்கு உட்பட்ட ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று கடையின் முன்பு இருசக்கர வாகனத்தில் வெள்ளை நிற சாக்கு மூட்டையில் ரேஷன் அரிசியை ஒருவர் வெளிப்படையாக ஏற்றிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடை விற்பனையாளரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கோழிகளுக்கு தீவனமாக அரிசி கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடைக்குள் சிலர் ரேஷன் அரிசி மூட்டையை பிரித்து, தையல் போடும் இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு மூட்டையில் இருந்து மற்றொரு மூட்டைக்கு ரேஷன் அரிசியை மாற்றிக்கொண்டிருந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து அரிசி மூட்டையுடன் தப்பினர். இது தொடர்பாக கடை விற்பனையாளர் மற்றும் கூட்டுறவு பண்டகசாலை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். கடத்தி செல்லப்பட்ட அரிசி மூட்டைகளை கண்டுப்பிடித்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதனிடையே இந்த புகார் தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.