காந்திபுரம், மைலேறிபாளையம் பகுதிக்கு நகர பேருந்தை மீண்டும் இயக்க மக்கள் கோரிக்கை
மதுக்கரை, செப்.2: தமிழகத்தில் 1971 ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, பொதுமக்களின் வசதிக்காக, கோவை காந்திபுரத்தில் இருந்து, 73 பி. என்கிற எண் கொண்ட, டவுன் பஸ், ரயில்நிலையம், உக்கடம், ஆத்துப்பாலம், சுந்தராபுரம், போத்தனூர், செட்டிபாளையம், ஒக்கிலிபாளையம் வழியாக மைலேறிபாளையதிற்கு டவுன் பஸ் இயக்கப்பட்டது. தினமும் காலை 6.30, 10.30, மதியம் 2 மணி, இரவு 9 மணி ஆகிய நான்கு முறை வந்து செல்லும் இந்த பேருந்து, பொதுமக்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. சுமார் 40 ஆண்டுகள் வந்து கொண்டிருந்த இந்த பேருந்து கடந்த 2011 ம் ஆண்டு, ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் போது, போத்தனூரில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியதால் நிறுத்தப்பட்டது. அப்போது, மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிந்த பின்னர், மீண்டும் பேருந்து இயக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் மேம்பால பணி முடிந்து பல வருடங்கள் ஆகியும், இந்த வழியாக அந்த பேருந்து இயக்கப்படவில்லை. அதனால், மேலேறி பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், அருகில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், செட்டிபாளையத்துக்கு செல்ல வேண்டும் என்றால், கோவை, பொள்ளாச்சி மெயின் ரோட்டின் வழியாக, 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மாலுமிச்சம்பட்டிக்கு சென்று, அங்கிருந்து டவுன் பஸ் மூலம் செட்டிபாளையம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட காந்திபுரத்தில் இருந்து மைலேறிபாளையம் வந்து கொண்டிருந்த 73 பி எண் கொண்ட டவுன் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.