காயாமொழியில் விசாகத்தையொட்டி முருகர் வேடமணிந்து குழந்தைகள் ஊர்வலம்
திருச்செந்தூர், ஜூன் 14: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு காயாமொழியில் முருகர் வேடமணிந்த குழந்தைகளின் ஊர்வலம் நடைபெற்றது. காயாமொழி ஐக்கிய விநாயகர் கோயில் அருகே உள்ள செந்தில் ஆண்டவர் திடலில் குழந்தைகள் முருகர் வேடமணியும் விழா நடந்தது. திருப்புகழ் இன்னிசையுடன் துவங்கிய நிகழ்ச்சியில் ஏழு மாத குழந்தை உள்பட ஏராளமான குழந்தைகள் முருகர் வேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் ஆலயம் வந்தனர். ஊர்வலத்தில் வேலுடன் சென்ற குழந்தைகளை பார்த்து கூடியிருந்தவர்கள் முருகா முருகா என பக்தி கோஷங்களை எழுப்பினர். கோயிலில் வேடமணிந்த அனைத்து குழந்தைகளும் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. இதில் குழந்தைகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.