சென்னை பல்கலை விடுதியில் பிரசவித்த மாணவி; கீழே கிடந்ததாக கூறி தனது குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைத்த காதலன்: விசாரணையில் உளறியதால் சிக்கினார்
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு, வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் கட்டை பையுடன் சென்று, நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியிடம், ‘கட்டை பையில் குழந்தை ஒன்று சாலையோரம் கிடந்தது. முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு வந்துள்ளேன்,’ என கூறியுள்ளார். உடனே, செக்யூரிட்டிகள் அந்த பையை திறந்து பார்த்த போது, ஆண் குழந்தை மிகவும் சோர்வுடன் இருந்தது. இதுபற்றி, அருகில் உள்ள திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பன்னர், அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து ெசன்று புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவரை பாராட்டினர்.பின்னர், குழந்தையை கொண்டு வந்த வாலிபருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்தனர். அப்போது, குழந்தை எந்த இடத்தில் கிடந்தது என்று போலீசார் கேட்டுள்ளனர். அப்போது அந்த வாலிபர், குழந்தை கிடந்த இடத்தை முன்னுக்குப் பின் முரணாக கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், வாலிபரிடம் ‘நீ குழந்தையை மீட்ட இடத்தை எங்களுக்கு காட்டு’ என்று கூறி அழைத்து ெசன்றனர். அவர், ஒரு இடத்தை காட்டினார். அந்த இடத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது, அவர் குறிப்பிட்ட நேரத்தில், அந்த இடத்தில் யாரும் குழந்தையை வீசவில்லை என்பதும், அங்கிருந்து இவர் மீட்டது போன்ற எந்த காட்சியும் பதிவாகவில்லை, என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகடைந்த போலீசார், உடனே வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த வாலிபர், ஊட்டியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் பிரவீன் (21) என்பதும், சைதாப்பேட்டையில் தங்கி குரூப்-1 தேர்வுக்கு தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தது தெரியவந்தது.
தன்னுடன் ஊட்டியில் படித்த சேலத்தை சேர்ந்த 21 வயது ெபண் ஒருவரை அவர் காதலித்து வந்ததும், இவர்கள் பல விடுதிகளில் அறை எடுத்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். தற்போது பிரவீனின் காதலி சென்னை கிண்டியில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி, பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வருவதும் தெரிந்தது. இவர்கள் அவ்வப்போது உல்லாசமாக இருந்ததன் விளைவாக மாணவி கர்ப்பமானார். கர்ப்பத்தை பிரவீன் ஆரம்பத்திலேயே கலைக்க தனது காதலியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் தனது குழந்தையை கலைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதை தன்னுடன் படிக்கும் மாணவிகள் மற்றும் விடுதியில் தங்கியுள்ள சக மாணவிகளுக்கு தெரிவிக்காமல் சாதுரியமாக மறைத்துள்ளார். அவரது ெபற்ேறாருக்கும் அவர் கர்ப்பமான விஷயத்தை மாணவி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் விடுதியில் தன்னுடன் தங்கி இருந்த மாணவிகள் கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்ற நேரத்தில், மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது தனது காதலன் பிரவீனுக்கு மட்டும் அவர் போன் செய்து அழைத்துள்ளார். பிறகு மாணவிக்கு விடுதியிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது வெளியில் தெரிந்தால் பிரச்னையாகும் என்பதால், குழந்தை பிறந்ததற்கான அறிகுறிகள் இல்லாதப்படி அறையில் அனைத்தையும் சுத்தம் செய்துள்ளார்.
மேலும், குழந்தை அழும் சத்தம் கேட்டால் பிரச்னை ஆகிவிடும் என்று கருதிய பிரவீன், குழந்தையை கட்டை பையில் வைத்து எடுத்துக்கொண்டு, மாணவியை விடுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அழைத்து வந்து திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். பிறகு, படிக்கும் போது, திருமணமாகாமல் குழந்தை பிறந்த தகவல் பெற்றோருக்கு தெரியவந்ததால், பெரிய சிக்கல் ஏற்படும், சக மாணவிகள் கேலி செய்வார்கள் என்பதால், வழியின்றி இருவரும் குழந்தையை சாலையோரம் கீழே கிடந்ததாக மருத்துவமனையில் ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி தான் நேற்று முன்தினம் மாணவி, தனது ஆண் பச்சிளம் குழந்தையை ஒரு கட்டப்பையில் வெள்ள துணியில் வைத்து காதலன் பிரவீனிடம் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், திருவல்லிக்கேணியில் லாட்ஜில் தாங்கி இருந்த மாணவியை மீட்டு, குழந்தையை ஒப்படைத்து, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர். மேலும், குழந்தையை பெற்ற இடம் கோட்டூர்புரம் காவல் எல்லைக்குள் வருவதால், கோட்டூர்புரம் போலீசாரிடம், காதலன் பிரவீனை ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாமல் சென்னை பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஆண் குழந்தை பெற்று தனது காதலனிடம் கொடுத்து கீழே கிடந்ததாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க அனுப்பிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.