சென்னையில் மாணவர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்ற 4,000 பேர் கைது: 2.9 ெமட்ரிக் டன் கஞ்சா, 67,700 போதை மாத்திரைகள் பறிமுதல்
சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லையில் போலீஸ் கமிஷனர் அருண் தலைமையிலான போலீசார் ‘போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தி போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுத்து வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் தென்மாநில டிஜிபிக்கள் ஒருங்கிணைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் மற்றும் தொடர்புடைய அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து போதைப்பொருள் வழக்கில் சென்னை காவல்துறை வெளிமாநில காவல்துறையுடன் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தமிழக காவல்துறையில் போதைப்பொருள் கட்டுப்படுத்த தனியாக உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘போதைப்பொருள் எதிர்ப்பு புலனாய்வு பிரிவு’ ஒன்று தொடங்கப்பட்டது.
உளவுத்துறை தலைமையில் இந்த பிரிவு சிறப்பாக செயல்பட்டாலும், சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டத்திலும் போதைப்பொருள் எதிர்ப்பு புலனாய்வு பிரிவு தொடங்கப்பட்டு சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக நிறுவனங்கள் அருகே அதிரடி சோதனை நடத்தி போதைப்பொருட்கள் விற்பனை செய்தவர்களை கைது செய்து வருகின்றனர்.
மேலும், ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணித்து ஐடி ஊழியர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்தவர்களை கூண்டோடு கைது செய்து வருகின்றனர். அதன்படி, சென்னை காவல்துறை கடந்த ஓராண்டில் போதைப்பொருட்ளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் விளைவாக போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 1,516 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2.9 மெட்ரிக் டன் கஞ்சா (அதாவது ரூ.3.87 கோடி மதிப்புள்ள கஞ்சா), 67,700க்கம் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக வெளி மாநிலத்தை சேர்ந்த 324 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் 26 வெளிநாட்டினர் உள்பட 4,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் மிகத்துல்லியமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருள் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ‘போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு’ சென்னையில் செயற்கை போதைப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஓராண்டில் 90 போதைப்பொருள் கும்பலை கைது செய்து அவர்களிடம் இருந்து மெத்தம்பெட்டமின், கெட்டமைன், ஹெராயின், கோக்கைன், எம்டிஎம்ஏ உள்ளிட்ட 72 கிலோ செயற்கை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கிலோ மெத்தம்பெட்டமின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அரும்பாக்கம் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கெட்டமைன் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.அதோடு இல்லாமல் பல ஆண்டுகளாக ரகசியமாக நடந்து வந்த போதைப்பொருள் கடத்தலையும் இந்த சிறப்பு பிரிவு தடுத்துள்ளது.