பாஜவில் மாநில பொறுப்பு வாங்கி தருவதாக ரூ.64 லட்சம் மோசடி செய்த போலி சாமியாருக்கு சிறை
சென்னை, அக்.31: ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்(54). இவர், ஆவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எனது கார் டிரைவர் சரவணன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் (எ) வாசு(32) என்பவர் அறிமுகமானார். இவர், திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், வாசு என்னிடம் பாஜ பிரபலங்கள், அதிகாரிகளை எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கு வீடு தேவைப்பட்டால் சொல்லுங்கள். இவர்கள் மூலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருகிறேன் என்றார். இவரை நம்பி 18க்கும் மேற்பட்டோரிடம் ரூ.20 லட்சம் வரை வாங்கி கொடுத்தேன். ஆனால், என்னை ஏமாற்றிவிட்டார். எனவே, வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் கடந்த ஏப்ரல் 9ம்தேதி அதே பகுதியை சேர்ந்த ராமானுஜம்(72) என்பவரும் வாசு மீது திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றேன். என்னுடைய நண்பர் சந்தானம் மூலம் கடந்த 2023ம் ஆண்டு அறிமுகமான வாசு, எனக்கு நிர்மலா சீதாராமன் நன்கு தெரியும். பாஜ கட்சியில் செல்வாக்கு இருப்பதாகவும், மாநில பொறுப்பு வாங்கி தருவதாகவும் என்னிடம் ரூ.70 லட்சம் கேட்டார். இவரை நம்பி ரூ.44 லட்சம் கொடுத்தேன். ஆனால், இதுவரை பாஜவில் மாநில பொறுப்பு வாங்கிதராமல் ஏமாற்றி வருகிறார்.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.இதையடுத்து வாசுவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திருமுல்லைவாயலில் உறவினர் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த வாசுவை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், போலி சாமியார் வேடமணிந்து பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்ட பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த படங்களை காட்டி தாசில்தார், போலீஸ் துறையில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து வாசுவை புழல் சிறையில் அடைத்தனர்.
