வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை: திமுக, காங்., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு
சென்னை, அக்.30: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவ.4ம்தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அன்று முதல் தேர்தல் பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்காளர் தகவல் உறுதிப்படுத்தும் பணி மேற்கொள்வார்கள். புதிய வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், வாக்காளர் தங்களது இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இணைக்கப்படும் என்று கூறி, தங்களது பெயர்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
அவசரகதியில் பீகாரில் நடைபெற்று வருவதுபோல சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்றால் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து விடுபட்டு போய்விடும் ஆபத்து உள்ளது என்று கூறி தமிழகத்தில் உள்ள திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகை கட்டிட கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகளாக திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு, அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.ராஜேஷ், தி.நகர் சத்யா, பாலகங்கா, பாஜ சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் வக்கீல் அணி பிரிவு மாநில துணை தலைவர் எஸ்.கே.நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சிறப்பு தீவிர திருத்தமானது 1951 முதல் 2004 வரை மொத்தம் 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், கடைசியாக 2002-04 காலக்கட்டத்தில் அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றுள்ளது. இச்சிறப்பு தீவிரத் திருத்தத்தின் முக்கிய செயல்முறைகள், முக்கிய நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட கால அட்டவனை ஆகியவை குறித்தும் விரிவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் எடுத்துரைத்தனர். மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7ம்தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆலோசனை கூட்டத்தில் அரசிய கட்சி பிரநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக பிரதிநிதிகள், இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாக்காளர் பட்டியலை முறையாக சீர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பாஜ மட்டும் இதற்கு ஆதரவு தெரிவித்தது.