ஆர்பிஎப், சிஇஐஆர் போர்ட்டல் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பு செல்போன்கள் மீட்பு
சென்னை, அக்.29: ரயில் பயணிகள் சேவையை மேம்படுத்தவும், டிஜிட்டல் திறனை உயர்த்தவும் தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) ஏப்ரல் மாதம் முதல் மத்திய உபகரண அடையாள பதிவேடு (சிஇஐஆர்) மூலம் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120க்கும் மேற்பட்ட இழந்த மொபைல் போன்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது. ரயில் பயணிகளின் இழந்த மொபைல் போன்களை கண்டறிந்து திரும்ப ஒப்படைக்க உதவும் வகையில், தொலைத்தொடர்பு துறை (டிஓடி) இந்த வசதியை ஆர்பிஎப்க்கு (RPF) விரிவுபடுத்தியது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஆர்பிஎப் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குள் மட்டுமல்லாமல், ராஜஸ்தான், அசாம், தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற தொலைதூர மாநிலங்களில் இருந்தும் போன்களை கண்டறிந்து மீட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் போதோ அல்லது ரயில் நிலையத்தில் இருக்கும் போதோ ஒரு பயணி மொபைல் போனை இழந்தால், அருகிலுள்ள ஆர்பிஎப் போஸ்ட்டில் அல்லது ரயில் மதாத் போர்ட்டல் மூலம் புகார் அளிக்கலாம். புகாரைப் பெற்ற பிறகு, ஆர்பிஎப் இழந்த சாதனத்தின் பிராண்ட், நிறம், மாடல் மற்றும் மொபைல் எண் போன்ற அத்தியாவசிய விவரங்களை சேகரிக்கிறது. இந்த தகவல்கள் சிஇஐஆர் போர்ட்டலில் பதிவேற்றப்படுகின்றன, அங்கு சாதனம் உடனடியாக தடுக்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது.
பின்னர், போன் புதிய சிம் உடன் செயல்படுத்தப்பட்டால், போர்ட்டல் மூலம் புதிய பயனரை ஆர்பிஎப் அடையாளம் கண்டு, அவர்களை தொடர்பு கொண்டு, சாதனத்தை உரிய உரிமையாளருக்கு பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்க ஏற்பாடு செய்கிறது. இந்த முறையான மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஆர்பிஎப்/ தென் ரயில்வே ஆப்பிள், சாம்சங், விவோ, மோட்டோரோலா, ரெட்மி போன்ற பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த போன்களை மீட்டு, உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.
நேற்று ஒப்படைக்கப்பட்ட போன்களில், சென்னை (தமிழ்நாடு), வயநாடு (கேரளா), ஜௌன்பூர் (உத்தரபிரதேசம்) ஆகிய இடங்களைச் சேர்ந்த பயணிகளுக்கானவை அடங்கும். சில சாதனங்கள் வேலூர் (தமிழ்நாடு), பிகானர் (ராஜஸ்தான்), பாட்னா (பீகார்) போன்ற இடங்களில் இருந்து கண்டறியப்பட்டன. இழந்த பொருட்களை உடனடியாக புகாரளிக்க ரயில் மதாத் போர்ட்டல் மற்றும் உதவி எண் 139ஐப் பயன்படுத்தலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.