ஜனாதிபதி வருகை சென்னையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: காவல்துறை அறிவிப்பு
சென்னை, ஆக. 29: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: குடியரசுத் தலைவர் வரும் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சென்னைக்கு வந்து 2ம் தேதி மதியம் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து, 3ம் தேதி விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். மேலும் குடியரசு தலைவர் கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தங்க உள்ளார். எனவே பிரிவு 163, பிரிவு 14ன் உட்பிரிவு (2) கீழும் டிரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னையில் பறக்க விட கடந்த 23ம் தேதி முதல் வரை தடை செய்யப்பட்ட ஆணை அக்டோபர் 21ம் தேதி நடைமுறையில் உள்ளது.எனவே, பாதுகாப்பு பொருட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான, சென்னை விமான நிலையம், சென்னை வர்த்தக மையம் (நந்தம்பாக்கம்), ராஜ் பவன் மற்றும் குடியரசு தலைவரின் வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட வரும் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய இரு நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.