அடுத்தவரின் கடையை வாடகைக்கு விட்டு ரூ.7 லட்சம் நூதன மோசடி: பெண்ணுக்கு வலை
சென்னை, நவ.28: ஓ.எல்.எக்ஸ் மூலம் வேறு ஒருவருக்கு சொந்தமான கடையை வாடகைக்கு விட்டு ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் மீது வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (32). ஆவடியில் பிரியாணி கடை நடத்துவதற்காக ஓ.எல்.எக்ஸ் மூலம் மாத வாடகைக்கு கடை தேடி வந்தார். அப்போது, சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வித்யா ராமன் (35) என்பவர், ரமேஷுக்கு அறிமுகமானார். இவர், ஆவடி சிடிஎச் சாலையில் தனக்கு சொந்தமான கடை உள்ளதாகவும், அதனை வாடகைக்கு கொடுப்பதாக ரமேஷிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அட்வான்ஸ் தொகையாக ரூ.7 லட்சத்தை வித்யா ராமனிடம் ரமேஷ் கொடுத்துள்ளார்.
பின்னர், அந்த கடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அங்கு வந்த ஆறுமுகம் என்பவர், கடை உரிமையாளரான எனக்கு தெரியாமல், எனது கடையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், இதுதொடர்பாக விசாரித்தபோது, அந்த கடை ஆறுமுகத்திற்கு சொந்தமானது என உறுதியானது. இதையடுத்து ரமேஷ், வித்யா ராமன் மீது, ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து ரூ.7 லட்சம் மோசடி குறித்து விசாரித்து வருகின்றனர்.
ரூ.7 லட்சம் மோசடி: சென்னை அடுத்த பனையூரை சேர்ந்தவர் கோகுல் (31), லேப் டெக்னீஷியன். கொரோனா காலகட்டத்தில் மாநகராட்சியில் பணிபுரிந்தார். அப்போது உடன் பணிபுரிந்த, பிரவீன் குமார்(36) அவரது மனைவி கலைவாணி (32) ஆகியோரின் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது, இருவரும் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பிய கோகுல், 2021ம் ஆண்டு ரூ.9 லட்சம் கொடுத்துள்ளார். பேசியபடி லாபம் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, ரூ.2 லட்சம் கொடுத்தனர். மீதமுள்ள ரூ.7 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றினர். இதுகுறித்த புகாரின் பேரில், நீலாங்கரை போலீசார், நேற்று பிரவீன் குமாரை கைது செய்தனர். கலைவாணியை தேடி வருகின்றனர்.